நேர்மையான கண்ணியமிக்க ஒருவரே எங்கள் தலைவன் பிரபாகரன் - நீதியமைச்சருக்கு காட்டமான பதிலடி!

24.02.2023 17:00:00

படித்த நீங்கள் முட்டாளாக இருக்காதீர்கள் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று வரை பிரபாகரனை மறக்கவில்லை எனவும் சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் எங்கள் தலைவரை நாங்களும் வாழ்நாளில் மறக்கப்போவதில்லை என்றும் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். அதேபோன்றே நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவினாலும் பிரபாகரனை மறக்க முடியாது என்றும் ஏனெனில் நேர்மையான கண்ணியமிக்க ஒருவரே பிரபாகரன் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கிளிநொச்சிக்கு ரணில் விக்கிரமசிங்க பயணம் மேற்கொண்டு, படம் காட்டியதாகவும் இதுவரை 100 ரூபாவிற்குகூட அங்கு நெல்கொள்வனவு இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் பொய்ப்பரப்புரை

எனவே பொய்யான செய்திகளை நாடாளுமன்றத்தின் ஊடாக பரப்பவேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் என்ற வகையில் இனவாதத்தை கொட்டாதீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் இந்த நாட்டில் என்ன நடக்கின்றது என கேள்வி எழுப்பிய அவர், தற்போதும் பிரபாகரனையா செல்லப்போகிறீர்கள் என்றும் காட்டமாக கருத்து வெளியிட்டிருந்தார்.

வடக்கு மாகாண மக்களின் விவசாயம் உள்ளிட்ட வளங்களை அரசாங்கம் அழிக்கவில்லை என்றும் பிரபாகரனே அனைத்தையும் அழித்தொழித்தார் என்றும் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ச சுமத்திய குற்றச்சாட்டிற்கே சிறீதரன் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.