எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிகை ராஷ்மிகா மந்தனா!

15.09.2026 14:38:34

பான்-இந்தியன் ஸ்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா, எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், நாளை நடிகர் கமல் ஹாசன் படத்தை தொடங்கி வைக்கிறார் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. புகழ்பெற்ற இந்திய கர்நாடக இசைக்கலைஞரான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை சினிமா படமாக எடுக்க கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் கௌதம் தின்னூரி இயக்கப்போகிறார். இவர் இதற்கு முன் தெலுங்கில் வெளிவந்த ஜெர்ஸி மற்றும் கிங்டம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்க பல்வேறு முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் 110-வது பிறந்தநாளான நாளை (செப்டம்பர் 16-ஆம் தேதி) இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்குகிறது. இதனை உலகநாயகன் கமல் ஹாசன் தொடங்கி வைக்கவுள்ளார் என்பதையும் தயாரிப்பு நிறுவனம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு, இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிப்பதன் மூலம் மிகப்பெரிய புகழை தேடி தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும், இது அவருடைய திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை ராஷ்மிகாவிற்கு தெரிவித்து வருகிறார்கள்.