ETR.FM

உயர்நீதிமன்றம் விஷாலுக்கு அவகாசம்..

09.09.2022 11:11 2 நிமிட வாசிப்பு
உயர்நீதிமன்றம் விஷாலுக்கு அவகாசம்..

தங்களிடம் பெற்ற கடனை செலுத்தாமல் வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிட விஷாலுக்கு தடை விதிக்க கோரி லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இவரது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, பைனான்சியர் அன்புச் செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இந்த கடனை அடைத்த லைகா சினிமா நிறுவனம், பணத்தை திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று விஷாலுடன் ஒப்பந்தம் செய்திருந்தது.

கடனை செலுத்தாமல் வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிட விஷாலுக்கு தடை விதிக்க கோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 15 கோடி ரூபாயை உயர்நீதிமன்றம் தலைமைப் பதிவாளர் பெயரில் 3 வாரங்களில் வங்கியொன்றில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும் என விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது நடிகர் விஷால் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவு படி சொத்து விவரங்களுடன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, நடிகர் விஷால் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மேலும் 2 வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதி, வழக்கின் விசாரணையை 23-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்

 

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்