ETR.FM

விஜய்க்கு இபிஎஸ் கேள்வி!

13.11.2026 15:07 3 நிமிட வாசிப்பு
விஜய்க்கு இபிஎஸ் கேள்வி!

குழந்தைகள் நாளில் திருப்பூர் மாவட்டத்தில் 11 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் வீரபாண்டி அருகே 11 வயது சிறுமி கடத்தப்பட்டு , கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் , பெரியபாளையம் அருகே மாணவி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் இவ்வருட குழந்தைகள் தினத்தை ஒட்டி வரும் செய்திகள் மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

  

மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த இந்த Deemed தாய்மாமாவின் ஆட்சியில், கடந்த 6 மாதங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதை இக்குற்றங்கள் வெட்டவெளிச்சமாக்குகின்றன. உங்கள் ஆட்சியில் Confident-ஆக இருப்பது குற்றவாளிகள் மட்டும் தான்! இப்படி ஒரு திக்குத் தெரியாத, பாதுகாப்பற்ற ஆட்சியில் எப்படி பெண்கள், பெண் குழந்தைகள் நிம்மதியாக, Confident-ஆக இருக்க முடியும்? பெண்கள் மீது, பெண் குழந்தைகள் மீது கொஞ்சமாவது உண்மையிலேயே அக்கறை இருந்தால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வழிவகைகளைப் பாருங்கள். திருப்பூர் சிறுமி பாலியல் வழக்கிலும், பெரியபாளையம் மாணவி தாக்குதலிலும் தொடர்புள்ள குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில் சட்டம் ஒழுங்கு குறித்து அவர் கூறியிருப்பதாவது: தனது சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளை பற்றி இதுவரை மௌனம் கலைக்காதவர், தமிழ்நாடு இன்றைக்கு அமைதிப் பூங்காவாக இல்லாமல், கொள்ளையர்களின் கூடாரமாக மாறியிருப்பது குறித்தாவது தனது கள்ள மௌனத்தை கலைப்பாரா ரீல் முதல்வர்?​பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், மாநிலத்தின் மூலைமுடுக்கெல்லாம் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடப்பது அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. விழுப்புரத்தில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து 16 சவரன் நகை கொள்ளை. திருவாரூரில் ஏழு பேராசிரியர்கள் வீட்டில் கொள்ளை.. நாமக்கல் பள்ளிபாளையம் அருகே நள்ளிரவில் தெருவிளக்குகளை அணைத்து 7 வீடுகளில் கொள்ளை முயற்சி.

இப்படி தமிழ்நாடு முழுவதும் கொள்ளையர்களின் கை ஓங்கி, மக்கள் பயத்தின் பிடியில் உறைந்து போயிருக்கும்போது கூட மௌன விரதத்தில் இருந்து கலைய மாட்டேன் என்றால் எப்படி? Confident ah இருங்க நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் அப்படின்னு வசனம் பேசினீங்களே! இந்த வசனம் மக்களுக்கு சொன்னீங்களா? இல்ல குற்றவாளிகளுக்கு சொன்னீங்களா? நீங்கள் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தும் அதேநேரத்தில் தான் இங்கே பல குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளன.. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மேடைக்கு மேடை மக்கள் பாதுகாப்பு பற்றி அடுக்குமொழியில் பேசிய ரீல் முதல்வர் அவர்களே! உங்கள் "Action" எல்லாம் சினிமா கேமரா முன்னால் மட்டும்தானா? எனவே இனியாவது கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விடுபட்டு, உடனடியாக இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என பொய்க்கால் குதிரை அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

     
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்