அதிமுகவில் இருந்து விலகி, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த 4 பேருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கடந்த மே 13-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக கொறடா உத்தரவை மீறி 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சபாநாயகரிடம் மனு அளித்தார். இதில் 21 பேர் மீதான புகார் வாபஸ் பெறப்பட்ட நிலையில், மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 பேர் மீதான மனுக்கள் நிலுவையில் இருந்தன.
இவர்கள் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த நிலையில், இவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்து அதிமுக தொடர்ந்த வழக்கில், தகுதி நீக்க மனுக்கள் மீது 2 மாதத்திற்குள் முடிவெடுக்க சபாநாயகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி, வரும் 10, 11, 12 ஆகிய தேதிகளில் இந்த 4 பேரிடமும் நேரில் விசாரணை நடத்த சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வரும் 17-ஆம் தேதி இறுதி விசாரணைக்கு பின் சபாநாயகர் தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.