‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ .
|
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் கடந்த ஜூன் மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை 20 அன்று மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி சென்றனர். அப்போது, டெல்லி காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் பேரணி சென்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது தடியடி நடத்தி வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டனர். |
|
அதனைத் தொடர்ந்து இந்த போராட்டம் நாடு முழுவதும் விரிவடைந்து பல்வேறு மாநிலங்களில் மாணவர்களும் இளைஞர்களும் போராட்டம் நடத்தினர். இந்த தொடர் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்ததால், அது ஒன்றிய அரசுக்கு நெருக்கடியாக மாறியது. இதையடுத்து, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை கடந்த ஜூலை மாதம் ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து பொதுத் தேர்வு முறைகளிலும் சீர்திருத்தம் மேற்கொள்வதற்காக உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிபுணர் நந்தன் நிலேகனி தலைமையில் 6 உறுப்பினர்கள் கொண்ட ஒரு உயர்மட்டக் குழுவை பிரதமர் நரேந்திர மோடி அமைத்தார். இந்த குழுவில், இஸ்ரோ முன்னாள் தலைவர் சோம்நாத், சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, முன்னாள் கல்விச் செயலாளர் அனிதா கர்வால், புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குநர் தபன் டேகா, தளவாடப் போக்குவரத்து வல்லுநர் அம்ரித் லால் மீனா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு, தேர்வு சீர்த்திருத்தகங்கள் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், தேர்வு நடத்தும் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரிடம் ஆலோசனைகளையும் யோசனைகளையும் கேட்டு வருகிறது. இந்த நிலையில், நந்தன் நீலகேணி தலைமையிலான தேர்வு சீரமைப்புக் குழு இன்று (04-11-26) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பின் போது, உயர்கல்விச் சேர்க்கைக்காக நடைபெறும் நீட் (NEET) அல்லது நீட் போன்ற தேர்வுகள் நடத்தப்படுவதற்கு தமிழ்நாடு அரசின் சார்பாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களையே சேர்க்கைக்கான அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. நீட் மற்றும் நீட் போன்ற தேர்வுகளை எதிர்த்து, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதியன்று நீட் தேர்விற்கு எதிராக சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், மருத்துவப் படிப்புகள் மற்றும் பிற உயர்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கையில் நீட் மற்றும் நீட் போன்ற தேர்வுகளை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. |