ETR.FM

இயக்குனருக்கு தொழில் சுத்தம் இல்லை.

09.11.2026 08:40 2 நிமிட வாசிப்பு
இயக்குனருக்கு தொழில் சுத்தம் இல்லை.

மலையாள திரையுலகில் வெளியாகும் துப்பறியும் கிரைம் திரில்லர் படங்களுக்குத் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வரிசையில், தொடர் கொலைகளை மையமாக வைத்து திரைக்கு வந்துள்ள திரைப்படம் சீன் . சூர்யா, நஸ்ரியா, ஆனந்தராஜ் மற்றும் டொவினோ தாமஸ் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், டார்க் காமெடி, புலனாய்வு மற்றும் விறுவிறுப்பான காட்சிகளுடன் கலவையான பாராட்டுகளைப் பெற்று வருகிறது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம், தொடர்ச்சியாக சூர்யாவின் ஹாட்ரிக் வெற்றியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால், வழக்கம் போலப் படத்தை தனது பாணியில் கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறார் யூடியூப் விமர்சகர் புளூ சட்டை மாறன். படத்தின் திரைக்கதை அமைப்பு,  குறைகள் மற்றும் மேக்கிங்கை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

காவல்துறையில் டிஎஸ்பியாக இருக்கும் நாயகன், எந்தவொரு கடினமான வழக்கையும் நொடிப் பொழுதில் தீர்க்கும் அசாதாரண திறமை படைத்தவர். ஆனால், பணியில் சிறிதும் நாட்டமில்லாத அவர், தொடர்ந்து ராஜினாமா செய்ய முயற்சிக்கிறார். உயர் அதிகாரிகள் அதை ஏற்காத நிலையில், ஊரில் அடுத்தடுத்து மர்மக் கொலைகள் அரங்கேறுகின்றன. அதே பகுதியில் உலா வரும் சைக்கோ கொலையாளியை நாயகன் எப்படிப் பிடிக்கிறார் என்பதே திரைக்கதை.

கிரைம் படங்களை உருவாக்குவதில் மலையாள இயக்குநர்கள் திறமையானவர்கள் என்றாலும், இதில் காட்டப்பட்டுள்ள காவல் நிலையம் கார்ப்பரேஷன் அலுவலகம் போலக் காட்சியளிப்பதாக மாறன் விமர்சித்துள்ளார். ஒட்டுமொத்த காவல் துறையும் வேடிக்கை பார்க்க, கதாநாயகன் மட்டுமே அனைத்தையும் ஒற்றை ஆளாகச் சரிசெய்வது போன்ற பழைய பாணி காட்சிகள் சலிப்பூட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். கதாநாயகனின் குறைபாடு மற்றும் அதற்கான பயிற்சி படம் முழுவதும் தொடர்வது எரிச்சலூட்டுவதாகக் கூறியுள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், இயக்குநரின் முந்தைய திரைப்படங்கள் வேற்று மொழிப் படங்களின் தழுவலாக இருந்தாலும், அவை சுவாரஸ்யமாக இயக்கியிருந்தா. ஆனால்  இப்படத்தில் வெளிப்படையாகவே ஹாங்காங் படமான  பிளைண்ட் டிடெக்டிவ் கதையைக் கையாண்டிருப்பது தெரிகிறது இயக்குனருக்கு தொழில் சுத்தம் இல்லை. மேலும், படத்தில் வரும் சிறப்புத் தோற்றக் கதாபாத்திரம், உலகப் புகழ்பெற்ற  தி சைலன்ஸ் ஆஃப் தி லேம்ப்ஸ் திரைப்படத்தில் இருந்து அப்படியே உருவப்பட்ட ஒன்று . 

நன்றாக வந்திருக்க வேண்டிய ஒரு விறுவிறுப்பான கதைக் களத்தை, வேண்டாத டார்க் காமெடி மற்றும் பலவீனமான திரைக்கதையால் இயக்குநர் வீணடித்துவிட்டதாக புளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்