திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா?
அண்மையில் நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் விஜய் கட்சியின் பல்வேறு கொள்கைகளை எடுத்துரைத்தார். அப்பொழுது திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் இரு கண்களாக பார்ப்பதாக தெரிவித்திருந்தார். |
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ''திராவிடம் என்பது வேறு தமிழ் தேசியம் என்பது வேறு. தமிழ் தேசியத்திற்கு நேர் எதிரில் எதிரானது திராவிடம். இரண்டும் எப்படி ஒன்றாகும். தமிழ்நாடு, பிறந்தநாளை நான் கொண்டாடுவேன். தமிழ்நாடு என்று அண்ணா பெயர் வைத்த ஜூலை 18 அவர்கள் கொண்டாடுவார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது மு.க.ஸ்டாலின் பேசிய காணொளிகள் இருக்கிறது. நவம்பர் ஒன்றை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று பேசிய பேச்சு இன்றும் இருக்கிறது. இந்த நிலத்தை கெடுக்கும் நச்சு ஆலைகளை ஸ்டெர்லைட், மீத்தேன், ஈத்தேன் என எல்லா நச்சு திட்டங்களையும் திராவிடம் அனுமதிக்கும். நிலத்தின் வளத்தை பாதுகாக்க தமிழ் தேசியம் துடிக்கும். எதிர்த்து போராடும். இரண்டும் ஒன்றா? எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது தமிழ் தேசியம். திராவிடம் தமிழை திட்டமிட்டு அழிக்கும். இரண்டும் ஒன்றா? தமிழ் பிள்ளைகள் படிக்க வேண்டும். கல்வி என்பது மானிட உரிமை கொடுக்க வேண்டியது அரசின் கடமை. இது தமிழ் தேசியம். இந்த நாட்டு குடிமக்கள், பள்ளி, கல்லூரி போகின்ற மாணவர்கள், உழைப்பவர்கள் எல்லாரும் குடிக்க வேண்டும் இது திராவிடம். இரண்டும் ஒன்றா? எப்படி ஒன்றாகும்? காவிரி நதிநீர் என் நிலத்தின் உரிமை அதை பெறவேண்டும் என்று போராடும் தமிழ் தேசியம். காவிரி நதிநீர் உரிமையை பறிகொடுக்கும் திராவிடம். 400 டிஎம்சி பெற்றுக் கொண்டிருந்தோம் இன்று நிலை என்ன? தமிழனுடைய சொந்த நிலம் கச்சத்தீவு எடுத்துக் கொடுக்கும் பொழுது பதவிக்காக நாற்காலி இறுகப் பிடித்துக் கொண்டு உரிமைக்காக குரல் எழுப்பாதது திராவிடம். கச்சத்தீவு என் தாய் நிலம் மீட்டெடுத்தே தீர வேண்டும் என்று போராடும் அது தமிழ் தேசியம். என் மீனவர்கள் சாவை பதவிக்காக சகித்து ரசித்துக்கொண்டிருக்கும் திராவிடம். ஒவ்வொரு மீனவன் சாகும் போதும் குலுங்கி குமுறி அழுது கொண்டிருக்கும் தமிழ் தேசியம் இதற்கு. ஒரு முடிவு வர வேண்டும் என்றால் இந்திய ராணுவம் என் மீனவ மக்களை பாதுகாக்கவில்லை என்றால் தமிழ் தேசியர்கள் நாங்களே மீனவ மக்களை பாதுகாக்க நெய்தல் படை கட்டுவோம் இது தமிழ் தேசியம். தமிழ் படித்தால் மட்டும்தான் தமிழ்நாட்டில் வேலை கிடைக்கும் இது தமிழ் தேசியம். திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா? நீட் தேர்வு, சிஏஏ, என்ஆர்சி, என்.ஐ.ஏ, ஜி.எஸ்.டி எல்லாவற்றையும் கொண்டு வந்தது காங்கிரஸ். கூட இருந்தது திராவிடம். அது இந்தியம் இது திராவிடம் இருவரும் கூட்டு பங்காளிகள். கொள்ளை கூட்டாளிகளை திராவிடத்தினர் கொள்கை கூட்டாளிகள் என கொண்டு வருவார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் எதிர்த்து களத்தில் நிற்பது தமிழ் தேசியம். அடிப்படையே தவறு. இது கொள்கை அல்ல கூமுட்டை. அதுவும் அழுகிய கூமுட்டை. ஒன்று சாலையில் அந்த ஓரத்தில் நில்லு அல்லது இந்த ஓரத்தில் நில்லு. நடுவில் நின்று லாரி அடித்து விடும். வாட் ப்ரோ.. இது ராங் ப்ரோ... சினிமாவில் பேசும் பஞ்ச் டயலாக் இல்ல தம்பி இது நெஞ்சு டயலாக். விடுதலை பெற்றவன் பேசுவதற்கும் அடிமை உரிமைக்கு பேசுவதற்கும் வேறுபாடு இருக்கிறது ப்ரோ. எங்கள் கோட்பாடு ஒன்றுதான் எங்கள் லட்சியத்திற்கு எதிராக எங்களை பெற்றவர்களே வந்தாலும் எதிரி தான். அதுல அண்ணனும் கிடையாது தம்பியும் கிடையாது''என்றார். |