திமுக, அதிமுகவுக்கு சாதகமாக போன தபால் ஓட்டுகள்!
|
அரசு ஊழியர்கள் பலர், விஜய் அரசுக்கு எதிராக திரும்பியுள்ளனர்.. நிர்வாகத்தை பொறுத்தவரையில் எம்ஜிஆர் சந்தித்த சிக்கல்களை இப்போது விஜய் சந்திக்கிறார். கட்சியை நடத்துவதைப் பொறுத்தவரையில் 1991 முதல் 1996 வரை ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட சில சிக்கல்களும் இப்போது விஜய்க்கு இருக்கின்றன என்று மூத்த பத்திரிகையாளர் மணி கருத்து தெரிவித்துள்ளார். Retroluxe என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பத்திரிகையாளர் மணி, "2026 பொதுத்தேர்தலில் விஜய்க்கு வாக்களித்த அரசு ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் இன்று விஜய் அரசுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள். இதற்கு உதாரணம் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் பதிவான தபால் வாக்குகள். |
|
கணிசமான அளவு வாக்குகள் திமுக, அதிமுகவுக்கு சென்றிருக்கின்றன. தவெக 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இதே ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் தவெக முதலிடத்தில் இருந்தது. இதற்கு 3 காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த எந்தக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. அவர்களுடைய கோரிக்கைகள் நியாயமானவை. பல ஆண்டுகளாக போராடி வரும் அவர்களுடைய கோரிக்கைகளை இந்த அரசால் நிறைவேற்ற முடியவில்லை. எந்த அரசாலும் நிறைவேற்ற முடியாது என்பதுதான் உண்மை. இன்றைய நிதிநிலைமை அவ்வளவு மோசமாக இருக்கிறது. அரசு ஊழியர்கள் - விஜய் ஆட்சி இன்னொரு பக்கம், அவர்கள் வழக்கமாக செய்து வந்த பல்வேறு சமுதாய நலப்பணிகளும் இப்போது பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் ஏற்பட்ட கோபமும் சேர்ந்துகொள்கிறது. ஆகவே, அரசு இயந்திரம் அரசுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த அரசை அதிகாரிகள் நிலையற்ற அரசாக பார்க்கிறார்கள். கலைஞர் 96 இடங்களை வைத்துக்கொண்டு சிறுபான்மை அரசை நடத்தியபோதுகூட அதன் நிலைத்தன்மை எந்த நேரத்திலும் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. 5 ஆண்டுகள் அரசு நீடிக்கும் என்ற நம்பிக்கை அரசு ஊழியர்களுக்கும் இருந்தது. ஆனால், விஜய் அரசைப் பொறுத்தவரையில் முதல் நாளிலிருந்தே எப்போது வேண்டுமானாலும் கவிழ்ந்துவிடலாம் என்ற நிலை இருக்கிறது. இதுவும் அரசு ஊழியர்கள் அரசுக்கும் அமைச்சர்களுக்கும் ஒத்துழைக்க மறுப்பதற்கு ஒரு காரணம். 1977 முதல் 1980 வரையிலான காலகட்டத்தில் எம்ஜிஆருக்கும் இதே பிரச்சனை இருந்தது. ஆனால், அவருக்கு தனிப்பெரும்பான்மை இருந்ததால் இவ்வளவு மோசமாக இல்லை. அப்போதிருந்த அதிகாரிகள் பெரும்பாலும் மனசாட்சியுடனும் மனிதநேயத்துடனும் செயல்பட்டார்கள். இன்றைக்கு அத்தகைய சிறந்த அதிகாரிகளைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. நிர்வாகத்தை பொறுத்தவரையில் எம்ஜிஆர் சந்தித்த சிக்கல்களை இப்போது விஜய் சந்திக்கிறார். கட்சியை நடத்துவதைப் பொறுத்தவரையில் 1991 முதல் 1996 வரை ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட சில சிக்கல்களும் இப்போது விஜய்க்கு இருக்கின்றன. கலைஞர் ஆட்சி தவறு செய்த எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அவர்கள் எதிர்க்கட்சிகளின் வலையில் விழுந்துவிடுவார்களோ என்ற அச்சமும் விஜய்க்கு இருக்கிறது. சிறுபான்மை அரசை நடத்துவதால் இது கத்தி மேல் நடப்பதைப் போன்ற நிலை. கலைஞருக்கு காங்கிரஸ் கட்சியின் 36 எம்எல்ஏக்களும், பாமகவின் 18 எம்எல்ஏக்களும் ஆதரவாக இருந்தார்கள். அதனால், 96 இடங்களை வைத்துக்கொண்டு 5 ஆண்டுகள் ஆட்சி நடத்தியபோதும் அரசு கவிழ்ந்துவிடும் என்ற சந்தேகம் ஒருபோதும் எழவில்லை. ஆனால், இப்போது விஜய் அரசுக்குப் பெரும்பான்மையும் இல்லை, அரசும் புதியது. இதனால், இந்த அரசை எளிதாக ஏமாற்றிவிடலாம், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம் என்று அதிகார வர்க்கம் நினைக்கிறது. பல அமைச்சர்களிடம் பேசும்போது, அவர்கள் சொல்வது, "சுதந்திரமாக செயல்பட விடமாட்டேங்கிறாங்க" என்பதுதான். சில நேரங்களில் அதிகாரிகள் சொல்வதும் நியாயமாக இருக்கலாம். நீதிமன்ற பிரச்சனை வந்துவிடும், எதிர்க்கட்சிகள் இதை பிரச்சனையாக்கிவிடுவார்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், சிலர் இதையே சாக்காக சொல்லி தங்கள் காரியத்தை சாதித்துக்கொள்கிறார்கள். தூய்மையான நிர்வாகத்தை கொடுக்க வேண்டும் என்று விஜய் உண்மையிலேயே விரும்புகிறார். ஆனால், அதை ஓரளவுக்குக் கீழ்மட்டத்தில் மட்டுமே சாதிக்க முடிந்திருக்கிறது. அதிகாரிகள் ஒரு பக்கம், அமைச்சர்கள் இன்னொரு பக்கம் என 2 தரப்பும் தங்கள் வழிக்கு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பெரும்பாலான அதிகாரிகள் அரசு இயந்திரத்தையும் அரசியல் தலைமைத்துவத்தையும் தங்கள் பக்கம் இழுக்க விரும்புகிறார்கள். அங்குதான் இப்போது இழுபறி நடக்கிறது. அதுதான் இப்போதைய சண்டை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார். |