புதிய அரசியல் பயணம் தொடர்பில் ரணிலின் அறிவிப்பு

17.01.2023 15:17:03

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் அவர்களை துன்பத்திலிருந்து விடுவிக்கும் புதிய அரசியல் முறைமையில் ஒற்றுமையுடன் கைகோர்க்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அனைத்து மக்கள் பிரதிநிதிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று(17) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர், மிகுந்த இக்கட்டான பொருளாதார பின்னணியின் மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

புதிய அரசியல் முறைமை

 

இங்கு மேலும் உரையாற்றிய அதிபர், எமது பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு வருவதற்கான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

நாம் எதிர்பார்க்கும் வருமானம் எமக்கு ஒரே தடவையில் கிடைக்க மாட்டாது. இவையனைத்தையும் ஒன்று சேர்த்து எமது வேலைதிட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வதையே நாம் எதிர்பார்க்கின்றோம்.

சம்பளம் வழங்குவது எமது பிரதான செயற்பாடாகும். இண்டாவது இடத்தில் ஓய்வூதியம் வழங்குவது உள்ளது. சமுர்த்தி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

இவற்றுடன் மேலதிகமாக இன்னும் இரண்டு வேலைதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அதேநேரம் அதற்காகவும் நாம் நிதியை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது.

மக்களுக்கான நிவாரணம்

நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை காணப்பட்டாலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவே நாம் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்.

இந்த 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி, நமது அரசியல் முறையை நாம் இப்போது மாற்றுவோம் என்று எதிர்க்கட்சியிடம் கேட்டுக்கொள்கிறேன்.

மக்களை துன்பத்திலிருந்து விடுவித்து அவர்களுக்கு நிவாரணம் வழங்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு முன்னேற்றத்தை எங்களால் அடைய முடியுமென்றால், நாட்டின் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” - என்றார்.