ஜனநாயகன் படத்திற்கு எதிராக வழக்கு!

29.07.2026 10:23:20

முதலமைச்சர் விஜய் நடிப்பில் கடந்த ஜூலை 23ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது ஜனநாயகன் படம். இது தான் விஜய்யின் கடைசி படம் என்பதால் தியேட்டரில் படம் பார்க்க ரசிகர்கள் அதிகம் ஆர்வத்துடன் வருகின்றனர். இந்நிலையில் ஜனநாயகன் படத்தில் இருந்து சில காட்சிகளை நீக்க வேண்டும் என மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.

மதுரை உசிலம்பட்டி அருகில் இருக்கும் பாப்பாபட்டி கிராமத்து மக்கள் சார்பில் சின்னசாமி என்பவர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

அதில் ஜனநாயகன் படத்தில் பாப்பாபட்டி கிராமத்தில் தேர்தல் நடக்கும் போது வாக்களிக்க முற்படுபவர்கள் கைகள் வெட்டப்படுவது போல காட்டப்பட்டு உள்ளது. மேலும் பெண்கள், சிறுமிகள் மீதும் வன்முறை தொடுப்பது போல காட்டப்பட்டு உள்ளது.

இது கிராமத்தின் பெயரை கெடுப்பதுடன், எங்களை சாதி வெறியர்கள் போல காட்டி இருக்கின்றனர். அதனால் படத்தில் வரும் அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி விளக்கம் கொடுத்த அரசு வழக்கறிஞர் "அது பாப்பாபட்டி அல்ல, பாப்பம்பட்டி" என தெரிவித்துள்ளார்.

இயக்குனர், தயாரிப்பாளர் இது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.