பாக்ஸ் ஆபிஸில் தடுமாறும் மாதவனின் ஜி.டி.என்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜி.டி.என் மறைந்த விஞ்ஞானியும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
ஃபைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கிருஷ்ணகுமார் ராமகுமார். அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்த இவர், ஓஹோ எந்தன் பேபி திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். தற்போது தனது இயக்கத்தில் உருவாகியுள்ள ஜி.டி.என் படத்தை பிரம்மாண்டமான பின்னணியுடன் உருவாக்கியுள்ளார்.
ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை மற்றும் அவரது கண்டுபிடிப்புகளை மையமாகக் கொண்ட இந்த பயோபிக்கில், ஜி.டி. நாயுடு கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். மேலும் சத்யராஜ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவின் முன்னோடி கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக அறியப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை சினிமாவாக கொண்டு வருவது என்பதே இப்படத்தின் முக்கிய பலமாக பார்க்கப்பட்டது. அவரது தொழில்நுட்ப ஆர்வம், கண்டுபிடிப்புகள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்களை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் படம் வெளியான பிறகு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே கலவையான கருத்துகளே வெளியாகி வருகின்றன. கதைக்களம் மற்றும் மாதவனின் நடிப்பு குறித்து சிலர் பாராட்டுகளை தெரிவித்தாலும், திரைக்கதை ரசிகர்களை ஈர்க்கவில்லை என்று தெரிகிறது. இதன் தாக்கம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் எதிரொலித்துள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் வெளியாகி மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், ஜி.டி.என் திரைப்படம் இதுவரை ரூ.3.01 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.