2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் முன்பு தவெக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில் 5 ஏக்கர் வரை வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தவெக அரசு பொறுப்பேற்றவுடன் தமிழக அரசின் கஜானா காலியாக இருப்பதாகவும், திமுக ஆட்சியில் தமிழக அரசின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதாகவும் தவெக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டது..
மேலும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை கடன் அளவுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட அளவு தமிழக அரசு தள்ளுபடி செய்தது. ஆனால் முழு கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்து போராட்டங்கள் நடைபெற்றது. எதிர்கட்சியான திமுகவும் விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறது.
இந்நிலையில்தான் கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் ரூ.75 ஆயிரம் வரை பயிர் கடன் தள்ளுபடி செய்து தமிழக அரசு தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் பயிர்க் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடு இன்றி ரூபாய் 75 ஆயிரம் வரை பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் தள்ளுபடிக்கு தகுதியான பயிர்க் கடன்களுக்கான கால வரையறை 01.05.2025 முதல் 31.03.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.